உங்கள் படைப்புகளை சிறந்த முறையில் வெளியிட இதயத்துடிப்பு பதிப்பகம் 54A மின்வாரியத் தெரு துக்காப்பேட்டை செங்கம் (ராஜம்மாள் கம்ப்யுட்டர் சென்டர் அருகில்) 9524753459

புதிய ஆத்திச்சூடி, அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஔவியம் பேசேல், அஃகம் சுருக்கேல். – ஆசிரியர்: ஔவையார்

Book For Sale

Thursday, December 10, 2015

2. சிந்துவெளி நாகரிகம்



நாம் வாழும் காலத்தைக் கணினிக்காலம் என்கிறோம். மின் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்ட பின் மிகவும் மதிக்கப்படும் கண்டுபிடிப்பாகக் கணினி உள்ளதால் இது கணினிக்காலம் எனப்படுகிறது.

ஆதி மனிதன் கல்லைப் பயன்படுத்திய காலம் கற்காலம் எனப்படும்.

மனிதனுக்கு முதன் முதலில் தெரிந்த உலோகம் செம்பு (தாமிரம்).

மனிதன் செம்பு, கல் இரண்டையும் பயன்படுத்திய காலம் செம்புக்கற்காலம் எனப்படுகிறது.

செம்புகற்காலத்தில் தான், இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான சிந்துவெளி (ஹரப்பா) நாகரிகம் செழித்திருந்தது.

சிந்துவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.

ஹரப்பா

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது 1856 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இருப்புப்பாதை அமைத்தனர். அங்கு மணல் மேடு ஒன்றைக் கண்டனர். அதில் தரமான சட்ட நீண்ட செங்கற்களும், கட்டட இடிபாடுகளும் இருந்ததைக் கண்டனர். அந்தக் கட்டடச் சுவர்களின் நேர்த்தியான  செங்கற்களை எடுத்துச் சென்று இரயில் பாதைக் கட்டமைப்புகளைச் செய்து கொண்டனர்.

பல கட்டடங்களின் சுவர்கள் அவ்வாறு பிரித்துப் பயன்படுத்துப்பட்டன. பின்னர் 1921 இல் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் அதே பகுதியை அகழ்வ ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் அது என்பதைக் கண்டறிந்தனர்.

ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள். அதனை அடுத்துக் கண்டறியப் பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் பிற நகரங்கள் யாவும் ஹரப்பா நாகரிகம் என்றே ஆய்வு செய்யப்பட்டன.

சுமார் 4,700 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்நாகரிகம் இந்தியாவில் மலர்ந்து இருந்ததாகக் கண்டறியப்பட்டது. இதைப் போன்ற நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற வேறுபல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டன.
பெருங்குளம்

சிந்துவெளி நகரங்களின் கோட்டைப் பகுதியில் கட்டமைப்பு நுணுக்கங்கள் மிக்க குளம் அமைக்கப்பட்டிருந்தது. இது சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. குளம் மெழுகு பூசிய சுட்ட செங்கற்களால் நீர் கசியாமல் இருக்குமாறு இணைத்துக் கட்டப் பட்டிருப்பது மிகவும் வியப்பை உண்டாக்குகிறது. குளத்தின் இரு பக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன. குளத்தின் பக்கங்களில் உடை மாற்றும் அறைகள் உள்ளன. குளங்கள் கிணற்று நீரால் நிரப்பப்பட்டிருந்தன. குளத்திலிருந்து அழுக்கு நீர் வெளியே செல்லவும் தனிக்கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது.

கட்டடங்கள்
வீடுகள் வரிசையாகவும், ஒழுங்காகவும் நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்தன. இரு அறைகள் கொண்ட சிறுவீடுகள் முதல் மாடிவீடுகள் வரை பலவிதமான கட்டடங்கள், மண்டபம் தானியக் களஞ்சியம் போன்ற பொதுக்கட்டடங்களும் இருந்தன. இவையாவும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. பொதுவாக வீடுகளில் ஜன்னல் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் கிணறம் குளியலறையும் காணப்பட்டன. வீடுகளின் முன் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நகர அமைப்பு
சிந்துவெளி நகரங்களின் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. பொதுவாக, நகரின் வடபகுதி குறுகலாகவும் உயரமாகவும் இருந்தது. ஆய்வாளர்கள், பாதுகாப்பிற்கான கட்டமைப்பாக இதனைக் கருதுகின்றனர். அந்நகரின் கிழக்குப்பகதி விரிந்தும், சற்றுத்தாழ்வாகவும் அமைந்துள்ளது. நகரின் இத்தகைய கட்டமைப்பைக் கொண்டு நாம் பல விவரங்களைச் சிந்தித்தறியலாம்.

வல்லுநர்களால் திட்டமிடப்பட்ட பின்னரே நகரங்கள் கட்டமைக்கப்பட்டன.
நகரங்கள் ஆட்சிசெய்ய உரிய நிருவாக அமைப்பு இருந்திருக்கக் கூடும்.
அகன்ற சாலைகளின் இரு மருங்கிலும் வீடுகள் சீராகக் கட்டப்பட்டு இருந்தன.
தளம் அமைத்த வீடுகளும் அடுக்கு மாடி வீடுகளும கட்டப்பட்டிருந்தன.
மொகஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுக்காட்டு மேடு என்பது பொருள்.

ஆட்சிமுறை
பொதுக் கழிவுநீர்த் திட்டம், பொதுக்குளம், பொதுமண்டபம், தெருவிளக்குகள், தெருக்களில் காணப்படும் குப்பைத் தொட்டிகள் போன்றவை அங்கு நகர நிருவாகம் சிறப்பாகச் செயல்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.

பாதாளச்சாக்கடை
வீட்டுக் கழிவுநீர், மூடப்பட்ட சரிவுள்ள சிறுகால்வாய்கள் வழியாகத் தெருவிலுள்ள பொதுக் கால்வாயில் இணைந்திருந்தன.

கால்வாய்ச் சந்திப்புகளில் திறந்து பழுதுபார்க்கும் மூடிகளும் அமைந்து இருந்தன.
பயன்பாட்டு அறிவியல்
கட்டடத் தொழில், நிலம் தேறுதல், மனை அளவீடு, கால்கோளுதல், தரமான கட்டுமானப் பொருள்களைத் தேர்ந்தெடுத்தல், வடிவக் கணித அமைப்புப் பற்றி அறிதல் முதலிய பயன்பாட்டு அறிவியல் (Applied Science) தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன.
மண்பாண்டம்: சக்கரத்தைப் பயன்படுத்திச் சட்டி, பானைகள் செய்யப்பட்டன. இவை  பளப்பளப்பாகவும் வண்ணங்கள் பூசப்பட்டும் இருந்தன.
கைத்தொழில்
எழுத்துப்பணி செய்வோர், முத்திரைகள் தயாரிப்போர், கட்டடப் பணியாளர்கள், மரச் சாமான்கள், பொம்மைகள் படைப்போர் மற்றும் பிற கைவினைஞர்கள் எனத் தொழிலாளர் பலர் இங்கு இருந்திருக்கக்கூடும்.
குழந்தைகள் விளையாடும் சுடுமண் பொம்மைகளும், கிளிஞ்சல், பித்தளை, செம்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் செய்யப்பட்ட பல விளையாட்டுப் பொருள்களும் இங்கு காணப்படுகின்றன.
ஆயுதங்கள், வீட்டுச்சாமான்கள், கருவிகள் முதலியவற்றைச் செய்ய செம்மையும் வெண்கலத்தையும் பயன்படுத்தினர். தங்கமும் வெள்ளியும் அணிகலன்கள் செய்யப்பட்டன. எடைக்கற்கள் ஒருவகைத் திண்மையான கற்களால் தயாரிக்கப்பட்டிருந்தன.
சுடுமண் முத்திரைகள்
செவ்வக வடிவிலான நூற்றுக் கணக்கான முத்திரைகளும் இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சித்திர வடிவிலான எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. அவ்வெழுத்துக்களை இதுவரை இனங்காண இயலவில்லை. களிமண் முத்திரைகளில் காளைகள், வண்டி, புறா, படகுகள் யோகமுத்திரையில் அமர்ந்துள்ள ஒருவரின் வடிவம், சுடுமண் உருவப் பொம்மைகள் முதலியன காணப்படுகின்றன.
எழுத்துமுறை
இங்கு கண்டெடுக்கப்பட்ட சுட்ட களிமண் பலகைகளின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை சித்திர எழுத்துகளாகும். முத்திரைகளில் பொறிக்கப்பட்டிருந்த படங்களும் எழுத்து வடிவங்களும் இவர்கள் எழுத்துக் கலையில் பெற்றிருந்த தேர்ச்சியைப் புலப்படுத்துகின்றன.
ஒவ்வொரு சித்திரமும், ஒரு குறிப்பிட்ட கருத்தைப் புலப்படுத்துகின்றது. ஏடுகளில் வரிகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாகவும் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்கள் தொல் – தமிழ் எழுத்துடன் உறவுடையன என்று கூறப்படுகிறது; இதில் மாறுபடுவோரும் உளர்.
தொழில்
சிந்துவெளியில் பயர்த்தொழிலாளர், கைத்தொழிலாளர், வணிகர், நெசவாளர், மண்பாண்டம் செய்வோர், உலோக வேலைசெய்வோர் எனப் பலவகைப்பட்ட மக்கள காணப்பட்டனர்;  விவசாயம் மக்களின் முக்கியத் தொழிலாகும்;  கோதுமை, பார்லி, போன்றவற்றை விளைவித்தனர்; மிஞ்சிய தானியங்களைக் களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர்.
உடைகள்
மக்கள் பருத்தி, கம்பளி, ஆடைகளை அணிந்திருந்தனர். வேட்டி போன்றவற்றைக் கீழ் ஆடையாகவும், சால்வையை மேல் ஆடையாகவும் அணிந்திருந்தனர்.
அணிகலன்கள்
தங்கம், வெள்ளி, தந்தம், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை அணிகலன்கள் செய்யப் பயன்படுத்தினர். ஏழை மக்கள் கிளிஞ்சல், தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தனர். ஆண், பெண் இருபாலரும் பற்பல அணிகலன்களை அணிந்திருந்தனர்.
கலைகள்
சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா (TERRACOTTA) எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர். பறவைகள், விலங்குகள், ஆண் பெண் உருவங்கள், எருதுகளால் இழுக்கப்படும் ஓட்டுபவருடன் கூடிய வண்டி மண்பாண்டங்கள், குவளைகள் போன்ற பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிற்பம்
1.  மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப் பட்டுள்ள வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை.
2.   தாடியுடன் காட்சிதரும் ஒருவரின் சுண்ணாம்புக்கல் சிலை முதலியன, அக்கால மக்களின் சிற்ப வேலைத் திறனுக்குச் சிறந்த சான்றுகளாகும்.
சமயம்
மொகஞ்சதாரோவில் கண்டு எடுக்கப்பட்ட பொருள்கள் அங்கு வாழ்ந்த மக்களின் சமயக் கோட்பாடுகளையும் சமயப்பற்றினையும் அறிவிக்கின்றன. பசுபதி என்ற சிவனையும், பெண் கடவளையும், லிங்கம், சூலம், மரம் முதலியவற்றையும் வணங்கினர்.
இறந்தவர்களைப் புதைக்கும்போது அச்சடலங்களுடன் உணவு, அணிகலன்களையும் சேர்த்துத் தாழிகளிட்டுப் புதைத்தனர்.
நகரங்களின் அழிவிற்கான காரணங்கள்
1.   மரத்தால் ஆன பொருள்கள் காணப் பொறாமையால் அவை பெருந்தீயில் அழிந்திருக்கலாம்.
2.   உள்நாட்டுப் போரில் தோன்றிய கலகத்தின் விளைவாகவும் அவை அழிந்திருக்கலாம்.
3.   இயற்கைக் காரணங்களாலும், அடிக்கடி மாறும் தன்மையுள்ள சிந்து ஆற்றின் வெள்ளப் பெருக்கினாலும் அவை புதையுண்டிருக்கலாம்.
4.   ஆரியர்கள், இந்நகரங்களை அழித்து முன்னேறியிருக்கலாம்.
5.   மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப் பட்டுள்ள மனித எலும்புக்குவியல், அந்நகரம் அயலவரின் படையெடுப்புக்கும் உள்ளாகி இருக்கலாம் எனச் சான்று பகர்கிறது.

No comments:

Post a Comment

1.எழுத்தியல்

எழுத்தின் பெயர் காரணம் எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூ...